அழிகிறது வடக்கின் கல்விப் புலம் – எச்சரிக்கிறது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !

Tuesday, July 9th, 2019

வடக்கின் கல்விப்புலத்தில் பழிவாங்குதல், பழிதீர்த்தல், கழுத்தறுத்தல், துரோகம் செய்தல், ஏமாற்றுதல் என்பன தற்போது அதிகரித்துவிட்டதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவிகளை வைத்துக்கொண்டு கீழ்நிலையில் உள்ளவர்களை பழிவாங்குவதும், பழிதீர்ப்பதும், கழுத்தறுப்பதும், துரோகம் செய்வதும், ஏமாற்றுவதும் வடக்கின் கல்விப் புலத்தில் இன்று அதிகரித்துவிட்டன.

இதனை இனங்கண்டு தீர்வுகாணாவிட்டால் அழியப்போவது வடபுலத்துக் கல்வி மட்டுமல்ல. வடக்கு மக்களின் எதிர்காலமும் தான் என எச்சரித்து தீர்வைக் கோரி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் மோசமானது.

உயர்நிலை அதிகாரிகளே சமமான அதிகாரிகளைப் பற்றி தூற்றுவதும், கீழுள்ளோரைப் பழிவாங்குவதும், தமக்கு விசுவாசமானவர்களை பாதுகாப்பதும், ஏதும் அறியாத அப்பாவிகள் மீது பழிசுமத்துவதும், அவர்களுக்குத் தண்டனை வழங்குவதும், குற்றமிழைத்தவர்களை தப்பிக்க விடுவதும் சாதாரணமாகிவிட்டது.

இதனை தட்டிக்கேட்க எவரும் இல்லை என்ற நிலையில் இத்தகைய செயற்பாடுகள் இன்னும் அதிகரித்தே செல்கின்றன.

இவை இவ்வாறு தொடருமாக இருந்தால் சட்டரீதியிலான ஜனநாயக வழிமுறைகள் இல்லாமல் போய் வன்முறை ரீதியிலான கலாசாரம் மோலோங்க வாய்ப்புள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவன் இதற்கான உடனடித் தீர்வினை கண்டே ஆக வேண்டும்.

ஆளுநருக்கே தெரியாமல் நடைபெற்ற, நடைபெறுகின்ற பல விடயங்கள் ஒவ்வொரு தனிமனிதனை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கின்றது.

நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், வழங்கல்கள், பதிலளித்தல்கள், நடைமுறைப்படுத்தல்கள், நடவடிக்கைகள் அனைத்திலுமே மேற்கூறப்பட்ட அதிகார துஸ்பிரயோகங்கள் நடைபெற்று வருகின்றன.

இவை தீர்க்கப்படாதவிடத்து தனி மனிதர்களுக்கு எதிரான தீவிரமான வெளிப்படுத்தல்கள் மேலோங்கும் என ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts: