அர்ஜூன் மகேந்திரனின் விவகாரம்: சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் பதில்!
Saturday, September 23rd, 2017
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் கருத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், அவரின் கட்சிக்காரரின் கொடுப்பனவு மற்றும் ஆலோசனைக்கு அமையவே அவர் கருத்து தெரிவித்துள்ளார் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் சட்டத்தரணியின் கருத்திற்கு, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆனைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இவ்வாறு பதிலளித்துள்ளனர்.
சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது,
மக்களின் பணத்தினை செலவிட்டு, சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கடந்த புதன்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்
அவரின் கட்சிக்காரரான அர்ஜூன் மகேந்திரன் நிதி செலுத்தி வழங்கும் ஆலோசனைகளுக்கு அமைய, ரொமேஷ் டி சில்வா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு முறையாக செயற்படுவதுடன், எவ்விதத்திலும் மக்களின் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்துவதில்லை.
மார்ச் மாதம் முதல் எமது குழுவிற்கு வழங்கப்பட்ட மேலதிகக் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதை தவிர்ப்பதற்கும் தீர்மானித்தோம்.எமது நாட்டிற்காக இந்த தொண்டர் சேவை காலத்தின் தேவையாகும் என எமது குழுவினர் நம்புகின்றனர்.
சுதந்திர இலங்கையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி இந்த ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றது.நாம் மேற்கொண்ட சேவை காரணமாக, ஆணைக்குழு முன்னிலையில் தவறுகள், சட்டவிரோத மோசடிகள், திரைசேறிக்கு ஏற்பட்ட பாரிய நட்டம் ஆகியன வெளிக்கொணரப்பட்டது.
உண்மையை வெளிப்படுத்துவதற்காக ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது முயற்சியாகும். அர்ஜூன் மகேந்திரனிடம் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு கால நீடிப்பு கோரியமையானது, எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயமாகும்.
அந்த செயற்பாடுகளுக்கு பூரணமாக ஆயத்தமாக வேண்டும் என்பதற்காகவே கால நீடிப்பு கோரப்பட்டிருந்தது.
அவ்வாறன்றி, மக்களின் பணத்தினை செலவிட்டு சொகுசு நடவடிக்கைகளை முன்னெடுக்கவல்ல.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், இந்த அமர்வுகளில் பங்கேற்பவர்கள் மற்றும் ஊடகங்களின் ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளும் பொதுமக்கள் ஆகியோர் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உண்மையில் மக்களின் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பில் இறுதியில் தீர்மானிப்பார்கள்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் கருத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், அவரின் கட்சிக்காரரின் கொடுப்பனவு மற்றும் ஆலோசனைக்கு அமையவே அவர் கருத்து தெரிவித்துள்ளார் என்பதை மீண்டும் நாம் சுட்டிக்காட்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


