அரச துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக வருகின்றது நியூசிலாந்து நிபுணர்கள் குழு – நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளிப்பு!

Friday, June 30th, 2023

அரச துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து நிபுணர்கள் குழு இலங்கைக்கு வருகைதந்துள்ளது

இதனடிப்படையில் இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எப்பள்டன், பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்..

இதன்போது இலங்கையுடனான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்குமாறும் கொழும்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவியை அதிகரிக்குமாறும் நியூசிலாந்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மஹரகம இலங்கை பல் மருத்துவக் கல்லூரி நியூசிலாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அன்பளிப்பு என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும் வசதிகளை மேலும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகர் அதை ஏற்றுக்கொண்டதுடன், அந்த பல் மருத்துவக் கல்லூரியை மீண்டும் அவதானித்து அதற்கு உதவுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் அரச துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு நிபுணத்துவத்தை வழங்க நியூசிலாந்து தயாராக இருப்பதாக உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார். இதற்கு உதவுவதற்காக நியூசிலாந்தின் முன்னாள் அரசாங்க சேவை ஆணையாளர் தலைமையிலான குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது.

காலம்கடந்த காணி கட்டளைச் சட்டத்தை திருத்தவும் இலங்கை திட்டமிட்டுள்ளது. இதன்போது ஆதிவாசிகளின் நில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியூசிலாந்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் காலம்கடந்த காணிச் சட்டத்தை திருத்தியமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள், கடன் மறுசீரமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, தேர்தல் சீர்திருத்தம் குறித்தும் இதன்’போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: