அரச உத்தியோகத்தர் எனத் தெரிவித்து பெண்களை ஏமாற்றியவர் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு!

Friday, June 8th, 2018

யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர் போன்று பாசாங்கு செய்து பெண்களை ஏமாற்றி அழைத்துச் செல்ல முற்பட்ட ஆசாமி ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வளாகத்தினுள் ஊழியர்கள் போன்று பாசாங்கு செய்த ஒருவர் அண்மையில் ஓர் பெண்ணை ஏமாற்றியுள்ளார். அது தொடர்பாக ஆய்வு செய்த வேளையில் மீண்டும் ஒரு பெண்ணிற்கு உதவுவதாக வாக்குறுதியளித்து அப் பெண்ணை கிளிநொச்சிக்கு அழைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த பெண்ணின் மூத்த சகோதரிக்கு சந்தேகம் ஏற்படவே அவர்கள் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து உத்தியோகத்தர்கள் உடனடியாகவே அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டுசென்றதனையடுத்து அரச அதிபர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதன் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் ஓர் பொலிஸ் குழு களமிறக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு மாவட்டச் செயலகத்தில் இருந்து பெறப்பட்ட சி.சி.ரி.வி. கமராவில் இளைஞனின் படமும் பெறப்பட்டு பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது.

பொலிஸாரின் உதவியுடன் குறித்த பெண் கிளிநொச்சிக்கு வர சம்மதம் தெரிவித்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வருமாறு குறித்த நபரை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

அதன்படி குறித்த நபர் நேற்று மதியம் பேருந்து நிலையத்திற்கு வந்து பெண்ணை ஏற்றிச் செல்ல முற்பட்டுள்ளார்.

அந்த சமயம் சிவில் உடைகளில் சூழ்ந்து நின்ற அத்தனை பொலிஸாரினாலும் குறித்த நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts: