அரசியல் ,பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை – எத்தியோப்பியா கலந்துரையாடல்!

அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைக்கு அமைவாக, ஆபிரிக்கப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னுரிமை அளித்துள்ளார்.
இதனடிப்படையில் எத்தியோப்பிய கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசுடனான வெளிநாட்டு அமைச்சு மட்டத்திலான மெய்நிகர் இருதரப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை இலங்கை முன்னெடுத்துள்ளது.
முதன் முறையாக நடைபெற்ற இலங்கைக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையிலான இருதரப்பு ஆலோசனைக கூட்டத்தில் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டு அமைச்சின் ஆபிரிக்கா விவகாரங்கள் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் பி. காண்டீபன் இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய அதேவேளை, எத்தியோப்பியத் தூதுக்குழுவானது எத்தியோப்பியா வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் ஆசியா மற்றும் பசிபிக் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் அஸ்பாவ் மொல்லலின் தலைமை தாங்கியிருந்தார்.
தற்போது இலங்கையின் 3 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 1 இரசாயன உற்பத்தி நிறுவனம் ஆகியன எத்தியோப்பியாவில் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எத்தியோப்பியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருப்பதாக இந்தக் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் விவசாயப் பதப்படுத்தல், நீர் மின் உற்பத்தி, ஆடை மற்றும் இரசாயனங்கள் தயாரித்தல் போன்ற ஏனைய துறைகளில் இலங்கை நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
எத்தியோப்பியாவில் விருந்தோம்பல் மற்றும் ஆடை உற்பத்தித் துறைகளில் தற்போது 400 க்கும் மேற்பட்ட இலங்கை வல்லுநர்கள் பணியாற்றி வருவதாகவும், எத்தியோப்பியாவில் உள்ள தனியார்துறை நிறுவனங்களில் இலங்கையர்களுக்கு திறமைசார் வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.
இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன் கடந்த வருடத்தில் எத்தியோப்பியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி 36.83 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டதுடன் இருதரப்பு இதை மேலும் அதிகரிப்பது தொடர்பாக இரு நாடுகளினதும் வணிக சபைகள் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்வதற்கான மிகையான ஆர்வத்தை எத்தியோப்பியா வெளிப்படுத்தியதுடன் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துதல் மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் மூலம் ஒத்துழைப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பரஸ்பரம் ஆர்வமுள்ள துறைகளிலான நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளும் கலந்துரையாடின. இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு பொருத்தமான முறையில் கொண்டாடுவதற்கு இரு நாடுகளும் இதன்போது இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|