அரசியல் தலையீடுகளால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை கவனிக்க நிர்வாகம் தவறுகின்றது :  மாணவர்கள் குற்றஞ்சாட்டு!

Friday, September 16th, 2016

 அரசியல் தலையீடுகளுடன் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை நிர்வாகம் கவனிக்கத் தவறுகின்றதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள்.

லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளின் அடிப்படை கற்றல் செயற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாமை குறித்து மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஊடகவியலாளர்களுடன் தமது கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மாணவர்களின் எதிர்கால கற்றல் செயற்பாடுகள் குறித்தும் கவலை தெரிவித்துள்ளதுடன் நிர்வாகத்தினரின் முறைகேடுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இலங்கையில் மிகவும் பிரபல்யமானதும் பாரம்பரியதுமான யாழ்ப்பாணம் லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி 1925ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பல சித்த மருத்துவர்களை உருவாக்கிய தமிழில் பாரம்பரியமுடைய சித்த மருத்துவக் கல்லூரி தற்போது செயழிலந்து கிடப்பதாகவும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பொய்யும் ஏமாற்றுத் தனமும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்கள்.

5வருட கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்படும் போது, லங்கா சித்த ஆயுர்வேத கல்லூரி, பட்டம் பெற்றுத் தருவதாகவும், அரச துறையில் வைத்தியராக பணிபுரிய முடியுமெனவும் நம்பிக்கை அளித்து இந்த கற்கைநெறிக்கு எவ்வித கட்டணமும் கட்டத் தேவையில்லை என பொய்யான வாக்குறுதி அளித்து பாடநெறியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் சரியான முறையில் விதிமுறைகளை நடைமுறைபடுத்தவில்லை. பாடநெறிக்கான அங்கீகாரம், அரசதுறையில் வேலைவாய்ப்பு என்பன பொய்யான வாக்குறுதியாகவே இருக்கின்றது. மாணவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கேட்டால் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள்.

மாணவர்களின் பிரச்சினைகளை வடமாகாண சுதேச மருத்துவ பணிப்பாளர் சியாமா தனக்கும் இந்த விடயங்களுக்கும் பொறுப்பு இல்லை என தட்டிக்கழிக்கின்றார்.வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடமாகாண சபையின் கீழ் சுதேச மருத்துவ திணைக்களம் இயங்கி வருகின்றது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடமும் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியபோதும், அவர் இதுவரையில் எந்தவித பதிலும் அளிக்காது தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கின்றார்.

இந்த நிலையில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய போது ஒரு மாத காலத்திற்குள் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதாக கூறினார். அவரும் ஒவ்வொரு மாத காலத்தினைக் கூறி தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கின்றார்.

சித்த மருத்துவ துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.

மேலும் சுன்னாகம் மின்சார நிலையத்திற்கு அருகாமையில் கல்லூரி இருப்பதனால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், மருத்துவ வசதிகள், வெளிமாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கான விடுதி வசதிகள், நிர்வாகம் சீரின்மை, நிர்வாகத்தின் அசமந்த போக்கு, அதிபரின் தொலைபேசி இயங்காமை, கல்லூரியின் தொலைபேசி இயங்காமை, கற்றல் செயற்பாடுகளுக்கான ஆசிரியர்கள் சமூகமளிக்காமை உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளை தாம் எதிர்நோக்குவதாகவும் மாணவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

Jaffna-News-720x480

Related posts: