அரசியலமைப்பை மீறும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படாது – பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து!

Saturday, July 16th, 2022

அரசியலமைப்பை மீறும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப் போவதில்லையென பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்..

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றையும் அவர் விடுத்திருந்தார்.

அதில் அரசியலமைப்பை பாதுகாத்து நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் பதில் ஜனாதிபதி வலியுத்தியுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேவையான பின்னணி மிக குறுகிய காலத்தில் தயாரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘நான் எப்போதும் ஜனநாயக ரீதியாக செயல்படுவதுடன் அரசியலமைப்புக்கிணங்கவே செயற்படுவேன். அத்துடன் அரசியலமைப்பை மீறி ஒருபோதும் செயல்பட இடமளிக்கப்போவதில்லையென்றும் பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும் நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் சீர்குலைக்க இடமளிக்க முடியாது. அவ்வாறு இடம்பெற்றால் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரும். அது அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கும் பெரும் பாதிப்பாக அமையுமென்றும் பதில் ஜனாதிபதி நேற்று தெரிவித்தார்.

அத்துடன் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமையளிக்குமாறும் அதன் பின்னர் கட்சி அரசியலை மேற்கொள்ளலாமென்றும் தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான செயற்பாடுகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ள அவர், புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பின்னணியை தமது பதில் ஜனாதிபதி காலத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் தொடர்பில் சிந்தித்தே நான் இந்த பதவியை பொறுப்பேற்றுள்ளேன். நாடு தற்போதுள்ள நெருக்கடி நிலையில் முதலில் நாட்டைக்கட்டியெழுப்புவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி அரசியலில் பின்னர் கவனம் செலுத்தலாம்.

ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு நான் மதிப்பளிக்கின்றேன். எனினும் போராட்டக்காரர்கள் மற்றும் கிளர்ச்சிக்காரர்களென இரண்டு பிரிவினர் நாட்டில் காணப்படுகின்றனர்.

ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துபவர்களுக்கு அதனை அமைதியாக முன்னெடுத்து செல்ல முடியும். எனினும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இரண்டு தினங்களுக்கு முன் இடம்பெற்ற சம்பவத்தில் இராணுவத்தினர் இருவர் பாரிய தாக்குதலுக்கு உள்ளகியுள்ளனர். அவர்களிடமிருந்த இரண்டு துப்பாக்கிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் 24 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி தெரிவு நடைபெறவுள்ள நிலையில் அந்த வாக்கெடுப்பு தொடர்பிலும் அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பதில் ஜனாதிபதி என்ற வகையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்.

அந்த வகையில் சட்டம், அமைதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம் என்றும் பதில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: