ஜனவரி இறுதிக்குள் வர்த்தமானி அறிவித்தல்!

Wednesday, January 18th, 2017

உள்ளூராட்சிகளின் எல்லை மீளாய்வு குழுவின் அறிக்கையில் தட்டச்சுத் தொடர்பான பிழைகளை சரிபார்த்தவுடன் மிகவும் கூடிய விரைவில் எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை சகல உறுப்பினர்களின் ஒப்பந்தத்துடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் நேற்று(17) கையளிக்கப்பட்டது. மீளாய்வுக் குழுவின் தலைவர் அசோக பீரிஸ் இந்த அறிக்கையை அமைச்சரிடம் கையளித்தார்.

ஜனவரி மாத இறுதிக்குள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும், வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஆகக் குறைந்தது 55 நாட்களிலிருந்து 72 நாட்களுக்குள் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு உறுப்பினர்கள் இருவரின் கையொப்பமின்றி அறிக்கையை கையேற்காமை குறித்து ஊடகங்களும், அரசியல் வங்குரோத்து நிலையடைந்தவர்களும் விமர்சித்திருந்தமை குறித்து தான் கவலையடையவில்லையென சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த அரசாங்கம் இழைத்த தகவறுகளுக்குப் பொறுப்பேற்று அதற்கான வீண் பழிகளைத் தமக்குச் சுமக்கவேண்டி ஏற்பட்டதாகவும் கூறினார். இந்த நிலையில் மீளாய்வுக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் ‘எல்லை நிர்ணய மீளாய்வு’ என்ற வசனத்துக்கு இனிமேல் முற்றுப்புள்ளி வைக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

மீளாய்வுக் குழுவின் உறுப்பினரான சட்டத்தரணி மிஸ்பா அடிக்குறிப்புடனேயே தனது கையொப்பத்தை இட்டுள்ளார். இது மீளாய்வு அறிக்கையின் அடிப்படைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. சகல உறுப்பினர்களின் கையொப்பங்களும் இன்றி அன்று அறிக்கையை கையேற்றிருந்தால் சட்டத்துக்கு விரோதமாக தான் செயற்பட்டதாகஅமைந்திருக்கும். இது குறித்து சட்டமா அதிபருடன் ஆலோசனை பெற்றதுடன், சகலரின் கையெழுத்துடனும் அறிக்கையைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை கிடைத்தது. இதற்கமைய ஐவரின் கையெழுத்துடன் அறிக்கையை கையேற்றுள்ளேன். அன்றையதினம் நாடகமாடியதாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து தான் கவலையடையவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் குறித்த சட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சகல கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். இச்சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜே.வி.பி உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. இதன்படி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத முற்போக்கான கட்சிகள் சகலதினதும் இணக்கப்பாட்டுடனும் குறித்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும். மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமைய தொகுதிவாரி முறையில் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி கூறியுள்ளார்.

எல்லை நிர்ணயம் குறித்த மீளாய்வு குழுவின் அறிக்கை மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டிருப்பதுடன், அதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுவதற்கான வகையில் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக அக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்தார். மீளாய்வுக்கு உள்ளாகும் வட்டாரங்கள் அல்லது தொகுதிகள் குறித்தே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். மாற்றத்துக்கு உள்ளாகாதவற்றை கடந்த வர்த்தமானியிலேயே பார்க்கவேண்டியிருக்கும். எனவே மக்கள் இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் சகல வட்டாரங்களையும் உள்ளடக்கியவகையிலும் அறிக்கையொன்றை தயாரித்துள்ளோம். எல்லை நிர்ணயம் குறித்த 45 புத்தகங்கள் தனித்தனியாகக் காணப்படுவதுடன், அவை மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோதிலும் நிர்வாக ரீதியான பணிகளை பூர்த்திசெய்ய வேண்டியிருப்பதால் மீளாய்வுக்காக திறக்கப்பட்ட அலுவலகம் சிறிதுகாலம் செயற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

colfaiszer_musthapha181739293_5150687_10012017_MFF_CMY

Related posts: