அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டது வேலணை சிற்பனை வீதி!

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தின் பல வீதிகள் குறிப்பாக தீவகத்தின் பல வீதிகளை காப்பெற் வீதிகளாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் அதன் முதற்கட்டமாக இன்றையதினம் வேலணை சிற்பனை வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிக்கையில் – தீவகப் பகுதியின் பல்வேறு பகுதிகளின் வீதிகள் குறிப்பாக உள்ளக வீதிகள் பல புனரமைக்கப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் எமது கட்சியின் ஆளுகைக்குள் இருக்கும் தீவகம் வடக்கு வேலணை பிரதேசத்தின் பல வீதிகளை காப்பெற் வீதிகளாக புனரமைப்பதற்கான முன்மொழிவுகளை நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கியிருந்தோம்.
இதனடிப்படையில் தற்போதைய அரசாங்கத்தை வழிநடத்தும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது எண்ணக்கருவிற்கு அமைய கொண்டுவரப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோ மீற்றர் காப்பெற் வீதியாக்கும் திட்டத்தில் எமது பகுதியில் உள்ள மக்களின் அவசிய தேவைகருதிய பல வீதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்மொழிந்திருந்தார்.
இந்நிலையில் வழுக்கையாறு குறிகாட்டுவான் பிரதான வீதியிலிருந்து வேலணை சுருவில் வரை உள்ள சுமார் 2.6 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சிற்பனை வீதியே இன்றையதினம் புனரமைக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த திட்டமானது உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒத்துழைப்புகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|