தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கவே சுமந்திரன் விரும்புகிறார் – முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா!

Monday, June 18th, 2018

டக்ளஸ் தேவானந்தாவின் காலத்தில் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் போன்று தற்போது எவ்விதமான அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

வவுனியா வெளிக்குளம் பகுதியில் நடைபெற்ற ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்காதிருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பிய அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கவே சுமந்திரன் விரும்புகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி என்ன கூறுகின்றதோ அதை நிறைவேற்றுவதற்கு சுமந்திரன் ஒற்றைக்காலில் நிற்கின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய புளொட் ரொலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன சுமந்திரனின் பொறிக்குள் ஒருபோதும் விழுந்துவிடக் கூடாது என்பதையும் பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றேன்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் இருப்பார். ஏன் இவ்வளவு ஆணித்தனமாகக் கூறுகின்றேன் என்றால் நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே பாடசாலையில் படித்தவர்கள். அதனாலேதான் நான் இதனை தெரிவிக்கின்றேன் என்று என்றும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமாக உள்ள டக்ளஸ் தேவானந்தா 13 தடவைகள் உயிராபத்திலிருந்து தப்பித்துக் கொண்டவர். அந்த வலாற்று உண்மை என்பது யாருக்கும் இருக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: