அமெரிக்க நிறுவனமொன்றின் 8 கணக்குகளை இடைநிறுத்த கொழும்பு நீதிவான் உத்தரவு!

Thursday, April 20th, 2023

“Onmax DT” என்ற நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டுள்ள அமெரிக்காவில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் 8 கணக்குகளை 6 மாதங்களுக்கு உடனடியாக இடைநிறுத்துமாறு கொழும்பு நீதிவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவின் “Binance.com” என்ற நிதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றத்தினால் அமெரிக்க நிதி நிறுவனமொன்றுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இடைநிறுத்த உத்தரவிடப்பட்ட கணக்குகளில் இலங்கை “Onmax DT” தனியார் நிறுவனத்தின் நான்கு பணிப்பாளர்களின் கணக்குகளும் அடங்குகின்றன. மேலும் அந்த நான்கு பேர் உட்பட அந்த நிறுவனத்தின் ஆறு பணிப்பாளர்களின் வெளிநாட்டு பயணத்தைத் தடைசெய்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த “Onmax DT” நிறுவனத்தின் இரண்டு கணக்குகள் தொடர்பாக இருவரது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அதன்போது முன்வைத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு அவர்கள் இருவரின் கைத்தொலைபேசிகள் மற்றும் கணினிகளை, கணினி அவசரகால பதிலளிப்பு நிறுவகத்திடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘Onmax DT’ நிறுவனம் இலங்கையில் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திய இலங்கையின் ஐந்து வங்கிகளில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் பெயரில் உள்ள 57 கணக்குகளை இடைநிறுத்த கடந்த 28ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோத பிரமிட் பரிவர்த்தனைகளில் இந்த நிறுவனம் பயன்படுத்திய தொகை 10 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: