இலங்கை – இந்தியா இடையே நீருக்கு அடியில் மின் இணைப்பு கேபிளை இணைப்பதற்கு இணக்கப்பாடு!

Saturday, December 23rd, 2023

இலங்கை – இந்தியா இடையே மின் இணைப்பை மேற்கொள்ள நீருக்கு அடியில் மின் இணைப்பு கேபிளை இணைப்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக குறித்த திட்டத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் இரண்டு நாடுகளின் துறைசார் அமைச்சுகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னெற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இருநாட்டு துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள் தலைமையிலான கூட்டு பணிக்குழுவுக்கு அனுப்பப்படும் தொழில்நுட்ப அறிக்கையும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் இந்திய அதிகாரிகளுடன் ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை இலங்கை அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.

இதன்போது கடலுக்கடியில் கேபிள் இணைப்பு ஒப்பந்தத்துடன் தொழில்நுட்ப அறிக்கையின் முன்மொழிவுகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடலுக்கு மேலாக மின் இணைப்பை மேற்கொள்வதற்கு செலவுகள் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், இதனை பராமரிக்கவும் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் கடலுக்கு அடியில் மின் இணைப்பை மேற்கொள்ளும் செயல்பாடே இறுதிப்படுத்தப்படும் நிலைக்கு பேச்சுவார்த்தைகள் நகர்ந்துள்ளன.

என்றாலும், நடுக்கடலில் கேபிள்களை கொண்டுசெல்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும் இருநாட்டு பேச்சுகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தை நிறைவேற்றுவதற்கான இறுதி அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை எனவும் திட்டத்தில் பணியாற்றும் குறித்த அதிகாரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: