சந்தை விலையை விட குறைவாக யூரியாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, September 14th, 2022

50 கிலோகிராம் யூரியா உர மூடையை, தற்போது சந்தையில் உள்ள விலையைவிடவும் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார்.

எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்காக சமூக – பொருளாதார சூழலை உருவாக்குவதே இதன் எதிர்பார்ப்பாகும்.

நாட்டின் மொத்த அரிசித் தேவையில் 3.6 மில்லியன் மெற்றிக் டன்களும், வருடாந்த வெங்காயத் தேவையில் 50 சதவீதமும், உருளைக்கிழங்குத் தேவையில் 35 சதவீதமும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கான கால்நடைகளின் மேம்பாட்டுக்காக, வருடாந்தம் தேவைப்படும் 650,000 மெட்ரிக் டன் சோளத்தில், 80 சதவீதத்தை இந்த ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பெரும்போகத்தில் நெல் மற்றும் சோளம் ஆகியவற்றை உற்பத்தி செய்யத் தேவையான 230,000 மெற்றிக் டன் இரசாயன உரத்தையும், 100,000 மெற்றிக் டன் TSP  மற்றும் 182,000 மெற்றிக் டன் MOPஆகியவற்றை உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய கடன் வசதிகளுடன் இறக்குமதி செய்வதற்கும், ஏனைய உணவு உற்பத்திக்குத் தேவையான உரத்தை தனியார் துறையினர் மூலம் இறக்குமதி செய்வதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய இரசாயன உரம் மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை தட்டுப்பாடு இன்றி சந்தையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: