அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு வாக்கு முறைகளில் மக்களின் நம்பகத்தன்மை வெகுவாக குறைந்துள்ளது – நாடாளுமன்ற தெரிவுக்குழு சுட்டிக்காட்டு!

Sunday, February 13th, 2022

விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைமையிலான கலப்பு தேர்தல் முறைமையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல் முறைமை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய 60 % உறுப்பினர்களை தொகுதி வாரி முறையின் கீழும் 40% உறுப்பினர்களை விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்வது தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டம் மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவு குழு கடந்த வாரம் கூடியபோது இவ்விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் சகல அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  உள்ளுராட்சி மன்றங்களின் தற்போதைய பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் தற்போது அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு வாக்கு முறை ஆகியன பற்றிய பொதுமக்களின் நம்பகத்தன்மை வெகுவாக குறைவடைந்துள்ளன.

விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை மற்றும் விருப்பு வாக்கு முறைமை ஆகியவற்றில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை மிகச்சிறந்த தேர்தல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவு குழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: