தனியார் கல்வி நிலையங்களை மூடபோவதாக ஒன்றியத்தினர் எச்சரிக்கை!

Sunday, September 11th, 2016

எமது தனியார் கல்வி நிலையங்களில் போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியிருக்கின்றோம் ஏற்படுத்தவும் இருக்கின்றோம். ஆனால் பாடசாலைகளுக்கு நிகராக கோருவது நியாயமற்றது. இதனை தவிர வேறு சில விதிமுறைகளையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது .இதனால் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களை மூடப்போவதாக கிளிநொச்சி தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களை நேற்று மாலை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஒரு பாடசாலையில் இருக்கின்ற அளவுக்கு அடிப்படை வசதிகளை தனியார் கல்வி நிலையங்கள் கொண்டிருக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக நிர்பந்தித்து வருகின்றார்.

இது தொடர்பில் அவரினால் தயாரிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு பதிவு செய்து உரிமைத்தை பெறவேண்டும் என்றும் பல தடவைகள் கடிதம் மற்றும் நேரடியான சந்திப்புகள் மூலம் நிர்பந்தித்து வருகின்றார்.

ஆனால் அந்த நிபந்தனைகளில் பல நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே அவற்றை தளர்த்தி எமது பிரதேசத்திற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை கொண்டுவருமாறு கோரியும் செயலாளர் ஏற்றுக்கொள்ளவதாக இல்லை எனத் தெரிவித்த தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியத்தின் தலைவர் கிளிநொச்சியில் உள்ள தொன்நூறு வீதமான தனியார் கல்வி நிலையங்கள் வாடகை அல்லது குத்தகை காணிகளில் இயங்கி வருகிறது.

கடந்த முப்பது வருடத்திற்கு மேலாக இவ்வாறு தனியார் கல்வி நிலையஙகளை நடத்தி வருகின்றோம். வெறுமனே பணத்திற்காக மட்டுமன்றி பல மாணவர்களை இலவசமாகவும் மேலும் பல மாணவர்களை ஐம்பது வீத கட்டணத்திலும் அனுமதித்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த நிலையில் அடிப்படை வசதிகள் தொடர்பில் ஒரு பாடசாலைக்கு நிகராக தனியார் கல்வி நிலையங்களில் கோருவது நியாயமற்றது.

எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மூடுவதனை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கல்வி வளர்ச்சியில் இலங்கையில் இறுதி மாவட்டமாக காணப்படுகிறது. கல்வியை பொறுத்தவரை பெற்றோர்கள் தனியே பாடசாலைகளை மட்டும் நம்பி தங்களது பிள்ளைகளை படிபிப்பது கிடையாது. அவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் உள்ள பாடங்கள் கற்பிக்கப்படுவது இல்லை ஆனால் நாங்கள் அதனை நிவர்த்தி செய்கின்றோம். அத்தோடு தனியார் கல்வி நிலையங்கள் வெறும் உழைப்புக்காக நடத்தவில்லை எங்களுக்கும் இந்த பிள்ளைகளின் கல்வியிலும் மாவட்டத்தின் கல்வியிலும் அக்கறை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் கல்வி நிலையங்களில் போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியிருக்கின்றோம் ஏற்படுத்தவும் இருக்கின்றோம். ஆனால் பாடசாலைகளுக்கு நிகராக கோருவது நியாயமற்றது. இதனை தவிர வேறு சில விதிமுறைகளையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கம்ச நாதன் தெரிவித்ததாவது – யாழ் மேல் நீதி மன்ற தீர்ப்பின் பிரகாரமும், பிரதேச சபையின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவும் தனியார் கல்வி நிலையங்களை விதி முறைகளுக்கு அமைவாக பதிவு செய்து உரிமத்தை பெற்றுக்கொள்ளுமாறு பதிரிகைகள் ஊடாகவும் நேரடியாகவும் பல தடவைகள் கூறியிருந்தோம்.

அந்த வகையில் 17 கல்வி நிலையங்கள் பதிவு செய்து உரிமத்தை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களை சபையிடம் சமர்பித்திருக்கின்றார்கள். ஏனைய கல்வி நிலையங்களில் முதற்கட்டமாக சபை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காத ஒன்பது கல்வி நிலையங்களுக்கு ஏதிராக நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிகுதி கல்வி நிலையங்கள் தொடர்பிலும் நாம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

IMG_5850_CI

Related posts: