அன்று சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!
Tuesday, April 12th, 2022
இன்று நாம் முகங்கொடுத்துள்ள நெருக்கடியை வெற்றி கொள்ள பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிட்டு வருகிறது.
வரலாற்றில் விவசாயிகளுக்கு அதிக சலுகைகளை வழங்கிய எமக்கு தற்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னதான் நாட்டிற்கு நல்லது என்றாலும் சேதனப் பசளை வேலைத்திட்டத்தை கொண்டு செல்ல இது சரியான தருணம் அல்ல. அதனால் நாம் மீண்டும் உர மானியத்தை வழங்க தீர்மானித்துள்ளோம் என பிரதமர் தஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்று, கடதாசி பற்றாக்குறை வரை முகங்கொடுத்து வருகின்ற இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் முடியாவிடினும் கூடிய விரைவில் இந்த நெருக்கடிக்கு இட்டுச்செல்லும் பாதையை முடிவுக்கு கொண்டுவர நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.
நீங்கள் வீதியில் போராடும் ஒவ்வொரு விநாடியும் எமது நாட்டிற்கு டொலர் கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாது போகின்றது. பாரிய மறுசீரமைப்பு செய்வதற்கு முதல் தேசத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அழிவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அதற்கு பலமுள்ள தைரியமுள்ள அனைவருக்கும் நாம் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். உங்கள் அனைவரதும் பொறுமையும் தைரியமும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் தாய்நாட்டை மிகவும் நேசிக்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம். அன்று பீதியிலிருந்த இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது கால்களில் குத்திய மணல் கற்களைவிட அதிகமாக என் மீதும் எனது குடும்பத்தினர் மீதுமான அவமானங்களை இன்று நான் சந்திக்கிறேன். அவற்றை என்னால் தாங்கிக்கொள்ள முடியும்.
எனினும், நாட்டிற்காக சேவையாற்றும் முப்படையினரையும், பொலிஸ் சேவையில் ஈடுபடுபவர்களையும் அவமதிக்காதீர்கள். இன்று நீங்கள் சுதந்திரமாக பயமில்லாமல் வீதிகளில் பயணிப்பதும், எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவதும் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்து நாட்டை காப்பாற்றியமையினாலேயே ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதேபோன்று கொரோனா தொற்றிலிருந்து உங்களை காப்பாற்றுவதற்கும் இந்த இராணுவ வீரர்கள் போரடினார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
பிள்ளைகளே, உங்கள் எதிர்ப்பு போராட்டங்களில் தேசிய கொடியை வைத்திருப்பதை நான் காண்கிறேன். நாம் பிறந்த இந்த பூமியில் எந்தவொரு இடத்திற்கும் தேசிய கொடியை கொண்டு சென்று ஏற்றி வைப்பதற்கான நாட்டை நாம் உருவாக்கி கொடுத்தோம். அன்று அந்த சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


