புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்க நடவடிக்கை – அமைச்சர் சாகல ரத்நாயக்க!

Thursday, March 16th, 2017

சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைய புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள அனைத்தும் மக்களும் பயமின்றி வாழும் உரிமையை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான பயங்கரவாதத்தை தடுக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதில் இந்த நிகழ்வில் இந்திய துணை ஜனாதிபதி கமீட் அன்சாரி, நேபால் துணைப் பிரதமர் பிம்லேந்திரன் நிதி, சிங்கப்பூர் உள்விவகார அமைச்சர் கே.சண்முகம் உட்பட பிராந்திய நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது சாகல ரத்னாயக்க மேலும் கூறியுள்ளதாவது,

முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளின் பின்னர் ஜனநாயகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய இரண்டு விடயங்களில் இலங்கை மீண்டும் வலுப்பெற்று வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடைகளில், அமைதி கட்டியெழுப்புவது, ஜனநாயகம், அபிவிருத்தி, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளை பாதுகாப்பது ஆகியனவே பிரதான கொள்கைகளாக முன்வைக்கப்பட்டது. 2009ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர் துரிதமாக நிறைவேற்ற வேண்டியிருந்த இந்த விடயங்கள் நிறைவேற்றப்படாததால், தற்போதைய அரசாங்கத்திற்கு அதனை விரைவாக மேற்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட யோசனைகளின் முன்னேற்றங்களை அமுல்படுத்த, இலங்கை அரசுக்கு போதுமான காலத்தை வழங்குவது தொடர்பான யோசனை ஒன்று இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது என்பதை இந்த சபைக்கு அறிவிக்கின்றேன்.

இலங்கை தொடர்பாகவும் இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் சர்வதேச சமூகத்திற்கு உள்ள நம்பிக்கைக்கு இது சாட்சியாகும். மேலும் இலங்கை அரசு முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையாக மாற்றி புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை வரையும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிகாரத்தை பரவலாக்குவது, சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகிறது, என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: