அனைவரினதும் கருத்துகளின் பிரகாரமே குரங்குகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Thursday, April 20th, 2023

சீன அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இல்லாவிட்டாலும், சீனாவில் உள்ள நிறுவனமொன்றின் வேண்டுகோளுக்கு இணங்க, குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

பயிர்களுக்கு ஏற்படும் அழிவுகளை கருத்திற்கொண்டு, விவசாய அமைச்சு என்ற வகையில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

சீன அரசாங்கத்தின் தலையீடு இதில் இல்லை. தனியார் நிறுவனமொன்றே மிருகக் காட்சி சாலைகளுக்காக குரங்களை வழங்க வேண்டுமென எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

அவர்கள் ஒரே தடவையில் அன்றி, பல்வேறு கட்டங்களாக அவர்கள் குரங்குகளை கோரியுள்ளனர்.

எனினும், குரங்குளை வழங்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் உள்ள குரங்களை பிடித்து நாம் வழங்கப்போவதில்லை. விவசாய பயிர்களுக்கு நாசம் ஏற்படுத்தும் விலங்குகள் தொடர்பிலேயே அவதானம் செலுத்தப்படும். இந்த விலங்குகளுக்கு இதன்போது எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படாது.

இதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படாததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரதும் கருத்துகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: