அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து!

Tuesday, February 1st, 2022

உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 7 ஆம் திகதிமுதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் பாடசாலை விவகார மேலதிகச் செயலாளர் இ.டபிள்யு.எல்.கே. எகொடவெல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மேற்படி பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் ஆரம்ப தரம் மற்றும் ஆரம்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது எனவும், பரீட்சை சூழலை பேணுவதற்கு இடையூறான பாடசாலையாக இருந்தால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளுக்கு விடுமுறை வழங்குவதற்கும், குறித்த பாடசாலைகளுக்குரிய பணியிடங்களை பரிந்துரைப்பதற்கும், கற்றல் முறைகளை மேற்கொள்வதற்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பரீட்சை கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பணிக்கமர்த்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், வலய மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்நிலையில் – கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிகளில் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளரிடம் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் ஆரம்ப பிரிவிற்கான பாடசாலைகளை நடத்த வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன் அண்மைய நாள்களில் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கோவிட் தொற்று கூடுதலாக பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் ஆரம்ப பிரிவு மாணவர்களை அழைத்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது நோய் கட்டுப்பாட்டை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை காலத்தின் பின்னர் நாட்டின் நிலைமையை கவனத்திற்கொண்டு பாடசாலை ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எடுக்க முடியும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி 10 ஆம் திகதிமுதல் அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு அழைக்கப்பட்டதன் பின்னரே மாணவர்கள் மத்தியில் நோய்த்தொற்று பரவுகை அதிகரித்தது என அவர் தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: