அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Tuesday, April 10th, 2018

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடத்தப்பட்டமையினால் ஏற்பட்ட நெருக்கடியைக் கருத்திற் கொண்டு பழைய முறையிலேயே அதாவது விகிதாசார முறைப்படி நாட்டில் உள்ள 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் கடந்த ஆண்டு நிறைவுக்கு வந்தது. வடக்கு மாகாண சபையினதும் மத்திய மாகாண சபையினதும் ஆயுள் காலம் எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது. எஞ்சிய 3 மாகாண சபைகளினது ஆயுள் அடுத்த ஆண்டு நிறைவுக்கு வரும்.

இதேவேளை கடந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு கூட்டு அரசு பல முயற்சிகள் எடுத்திருந்தது. ஏற்கனவே கிடப்பிலிருந்து சட்டவரைவு மீதான இரண்டாம் விவாதத்தை நடத்தி மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைத்திருந்தது.

இந்த விவாதத்தின் போது மாகாண சபைத் தேர்தல்களை கலப்பு முறையில் நடத்துவதற்கும் அதுவும் உள்ளுராட்சித் தேர்தலின் போது பின்பற்றப்பட்ட 60:40 என்ற அடிப்படையில் அல்லாமல் 50 சதவீதம் விகிதாசாரம், 50 சதவீதம் வட்டாரம் என்ற அடிப்படையில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

உள்ளுராட்சித் தேர்தல் புதிய கலப்பு முறையில் நடத்தப்பட்டிருந்தது. இந்தத் தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் பல சபைகளில் உறுதியற்ற ஆட்சி உருவாகியுள்ளது. இந்தத் தேர்தல் முறையில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால உள்ளிட்ட சகல அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த தீர்மானித்துள்ளதுடன் பழைய விகிதாசார முறையில் தேர்தல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: