அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவிப்பு!

Thursday, May 5th, 2022

அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதும் விலை ஏற்ற இறக்கங்களை தடுப்பதும் இதன் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையானது பொருட்களின் விலைகளை இன்னும் கட்டுப்படுத்தவில்லை எனவும், எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசியப் பொருட்களின் திட்டவட்டமான பட்டியல் இன்னும் கிடைக்காததால் பொருட்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்ய முடியாது.

அதன்படி எதிர்காலத்தில் இவ்வாறானதொரு ஆவணத்தை தயாரித்து கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலையின் போது அரிசி விலை உயர்வை தடுக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகபட்ச விலை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசிக்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையினால் வழங்கப்படும் அரிசிக்கான அதிகபட்ச தள்ளுபடி விலையில் பாதிப்பு ஏற்படாது என நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதித் தலைவர் துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: