அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வெள்ளியன்று எரிபொருள் விநியோகம் ஏனையோருக்கு வாகன இலக்கத்தின் அடிப்படையில் வழங்க ஏற்பாடு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022

அத்தியாவசிய சேவைகளுக்காக வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிக்கவும் ஏனையோருக்கு வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கவும் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இது தவிர இந்த நெருக்கடிக்கான காலகட்டத்தில் வேறு பல யோசனைகள் குறித்தும் ஆராயப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவிக்கையில் –

இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள்,சுற்றுலா பஸ்கள், அம்பியூலன்ஸ்கள், பாடசாலை வேன்கள் என்பவற்றுக்கு இ.போ.ச டிப்போக்களினூடாக எரிபொருள் விநியோகிக்கப்படும்.

வாகன இலக்கத்துக்கு அமைவாக எரிபொருள் வழங்கும் திட்டமொன்றை அறிமுகம் செய்யவும் அரச துறைக்கு எரிபொருள் வழங்கும் விசேட தினமாக வெள்ளிக்கிழமையை ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றுக்கு நீண்ட கால திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் 20 இலட்சம் பேர் வரை பணியாற்றுகின்றனர். அவர்களின் வீடுகளில் வாகனங்கள் இருக்கும். அவர்கள் வங்கிகளினூடாக அனுப்பும் பணத்தின் ஊடாக எரிபொருள் விநியோகிப்பதால் டொலர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

எரிபொருள் பெறுவதற்கு தேவையான அனைத்து முன்னெடுப்புகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எனவே மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்று கோருகிறோம்.

இதனை கொள்வனவு செய்வதற்கான நிதி நெருக்கடியை இலகுவாக யாரும் கருதக் கூடாது. முடிந்தளவு அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த மாதமாகும் போது மானியம் வழங்கும் நிலை உருவாகலாம்.

சப்புகஸ்கந்தவில் மசகு எண்ணெய் உற்பத்திகளை இந்த வாரம் ஆரம்பிப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர அறிவித்துள்ளார்.

டீசல் மற்றும் பெற்றோல் என்பவற்றை ஒளித்து வைப்போரை கைது செய்யும் நடவடிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய நிறுவனம் குறைந்த விலையில் லிட்ரோ கேஸ் கொண்டுவர முன்வந்தது. ஆனால் அவற்றை விநியோகிக்கும் வசதி இன்மை காரணமாக பழைய விநியோக கம்பனியை தெரிவு செய்ய நேரிட்டது.

பாரிய களஞ்சிய வசதி இல்லாததால் லாப் கேஸின் களஞ்சியத்தை பயன்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: