அத்தியடியில் பொது இடத்தில் கழிவுகளை வீசியபோது சுகாதார பரிசோதகர்களால் பிடிக்கப்பட்ட ஆசிரியர்!

Saturday, June 13th, 2020

யாழ்.ஸ்ரான்லி வீதி அத்தியடி பகுதியில் பொது இடத்தில் பொறுப்பற்ற விதத்தில் கழிவுகளை வீசியபோது சுகாதார பரிசோதகர்களால் பிடிக்கப்பட்ட ஆசிரியர் தனது மாமனாரின் பெயரை கூறி தப்பித்துள்ளார்.

இந்த நிலையில், நீதிமன்றில் அவர் குற்றப்பணம் செலுத்தும்போது உண்மை கண்டறியப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் அத்தியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் அதே பகுதியில் உள்ள வீதியில் தனது வீட்டுக் குப்பைகளைக் கொண்டுசென்று கொட்டியுள்ளார்.

இதனை அறிந்த பொதுச் சுகாதார பரிசோதகர், ஆசிரியருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கு அவரின் தகவல்களைக் கேட்டபோது தனது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் அவர் தனது மாமனாரின் பெயரை தனது பெயர் என வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற நிலையில், நீதிமன்றினால் அவருக்குக் குற்றப் பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் அவரின் தேசிய அடையாள அட்டையினை குற்றப் பணம் கட்டுவதற்காகப் பரிசோதித்தபோது, அவரின் உண்மையான பெயர் கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக பெயர் மாற்றம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் நேற்று முன்தினம் மாலை அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை , நீண்ட காலமாக அங்கு வசிப்போரினால் அப் பகுதிகளில் உள்ள வீதிகளில் வீட்டுக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதனால் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் பலராலும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: