அச்சத்துக்கு மத்தியிலும் கிறிஸ்மஸ் பண்டிகையைக் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள்!

Friday, December 25th, 2020

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

நத்தார் பண்டிகையானது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வண்ணமாக ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது.

வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தில் பாப்பரசர் ப்ரான்ஸிஸ் தலைமையில் பிரதான நத்தார் தின ஆராதனைகள் இடம்பெற்றுள்ளது.

இம்முறை கொரோனா பரவல் காரணமாக குறைந்த மக்கள் தொகையுடன் ஆராதனைக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் உலக நாடுகள் பலவற்றிலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையிலும் தனிமைப்படுத்தப்படாத இடங்களில் உள்ள தேவாலயங்களில் 50 பேருக்கு மேற்படாத மக்கள் தொகையுடன் ஆராதனைகள் இடம்பெற்றன.

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் கட்டம் கட்டமாக தேவ ஆராதனைகள் நடைபெற்றிருந்தன.

மேலும் இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெறும் இரண்டாவது கிறிஸ்மஸ் பண்டிகை இதுவாகும்.

கடந்த வருடம் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிய மக்கள், இம்முறை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாடளாவிய ரீதியில் குறைந்தளவான மக்கள் தமது பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: