மன்னார் இந்தியா இடையே நில ரீதியிலான தொடர்பு – இந்தியப் பிரதமருடன் பேசியுள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, January 8th, 2024


தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் அண்மையில் யாழ்.ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னணி பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதேவேளை நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வகையில் வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு மாணவர்களை ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மனித வளமே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமைகின்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நவீன தொழில்நுட்பத்தை மையப்படுத்தி அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குதல் உள்ளிட்ட உயர்கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து இதன்போது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் விரைவான முன்னேற்றத்தின் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

இன்னிலையில் ஒரு நாடு என்ற ரீதியில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை வலுவான துறைமுகங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

அத்துடன் தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: