2017 இல் 22.2 பில்லியன் டொலர் மனிதாபிமான உதவி கோரும் ஐ.நா!

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சுமார் 93 மில்லியன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு வரலாற்றில் மிகப்பெரிய தொகையான 22.2 பில்லியன் டொலர் உதவியை ஐ.நா கோரியுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான மனிதாபிமான உதவிகளாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பாதி அளவான பணம் சிரியா, யெமன், ஈராக் மற்றும் தென் சூடானில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படும் என்று ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்காக ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு ஐ.நா 7.9 பில்லியன் டொலர் உதவி கோரிக்கையை விடுத்த நிலையில் அந்த தொகை தற்போது சுமார் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.
“நீடித்த நெருக்கடி நிலை காரணமாக மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் நிலையிலேயே நாம் இதனை கோரி இருக்கிறோம்” என்று ஐ.நா மனிதாபிமான தலைவர் ஸ்டீபன் ஓபிரைன் குறிப்பிட்டுள்ளார்.
33 நாடுகளின் மனிதாபிமான உதவிகளுக்கான கோரிக்கைக்கு அமையவே ஐ.நா இந்த அறிவிப்பை தயாரித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பிருண்டி, கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் சோமாலியா போன்ற பல்வேறு நாடுகளும் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டிலும் மனிதாபிமான உதவிகளை கோரி வருகின்றன.
இவ்வாறே 2016 ஆம் ஆண்டுக்கு ஐ.நா 22.1 பில்லியன் டொலர் மனிதாபிமான உதவிகளை கோரியபோதும் போதிய நன்கொடைகள் கிடைக்காத நிலையில் கடந்த நவம்பர் மாதம் முடிவு வரை கோரி தொகையில் 51 வீதமே பெறமுடிந்துள்ளது.
சிரியாவின் ஐந்தரை ஆண்டு யுத்தத்தில் 13.5 மில்லியன் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்காத பட்சத்தில் அங்கு மனிதாபிமான நெருக்கடி வேகமாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|