12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை!

Tuesday, January 23rd, 2018

பூநகரி நாச்சிக்குடா வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  (22) தீர்ப்பளித்தார்.

2010ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று வன்புணர்ந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது மைத்துனன் உறவு முறைகொண்ட குடும்பத்தலைவர்  கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிரான சுருக்கமுறையற்ற விசாரணை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நடாத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழக்கு பாரப்படுத்தப்பட்டது. சந்தேகநபரும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பெற்றோரின் பாதுாகப்பிலிருந்து கடத்திச் சென்றமை மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்புணர்ந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை சந்தேகநபருக்கு எதிராக முன்வைத்து சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று  (22)  விசாரணைக்கு வந்தது. எதிரியும் பாதிக்கப்பட்ட தரப்பும் மன்றில் முன்னிலையாகினர்.

“எதிரி தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கின்றார். மதுபோதையில் அவ்வாறு நடந்துகொண்டமைக்கு இப்பொது வருத்தப்படுகிறார். அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்கி மன்று விடுவிக்கவேண்டும்” என்று எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் கருணை விண்ணப்பம் செய்தார்.

“எதிரி தனது குற்றத்தை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு உச்சபட்ச தண்டனையை மன்று வழங்கவேண்டும்” என்று வழக்குத் தொடுனரான அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

“எதிரி குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது முதாவது குற்றமான பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து சிறுமியைக் கடத்திச் சென்றமைக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன் 5 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இரண்டாவது குற்றமான சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டப் பணமாக 5 ஆயிரம் ரூபாவை செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 2 இலட்சம் ரூபா பணத்தை வழங்கவேண்டும்.

எதிரி இரண்டு வகை சிறைத் தண்டனைகளையும் ஏக காலத்தில்  அனுபவிக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  தீர்ப்பளித்தார்.

Related posts: