வெங்காயம், உருளைக் கிழங்குக்கு இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் – யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் விவசாயத்திணைக்களம் கோரிக்கை!

Saturday, January 7th, 2017

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு அறுவடைக் காலங்களில் இவற்றின் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட விவசாயத் திணைக்களம் மாவட்டச் செயலரைக் கோரியுள்ளது. விவசாயத் திணைக்களத்தினால், யாழ்.மாவட்டச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

177.742 மெற்றிக்தொன் விதை உருளைக்கிழங்கு 888 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. உருளைக்கிழங்குச் செய்கையானது 88.87 ஹெக்ரேயர் நிலபரப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. உடுவில் கோப்பாய், தெல்லிப்பழை பிரதேச செயலகங்கள் மூலம் 75 சமுர்த்தி பயனாளிகளுக்கு 12.25 மெற்றிக்தொன் விதை உருளைக்கிழங்கு வழங்கப்பட்டு 6.125 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்குச் செய்கையின் சராசரி விளைச்சல் ஒரு ஹெக்ரேயருக்கு 16 மெற்றிக்தொன். இந்தச்செய்கை மூலம் 1,519.92 மெற்றிக்தொன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த மாதம் 1அம் வாரத்தில் ஆரம்பமாகி மார்ச் மாதம் 15ஆம் திகதி வரையும் உருளைக்கிழங்கு அறுவடை செய்யப்படும். இலங்கையில் மாதமென்றுக்கு 13,738 மெற்றிக்தொன் உருளைக்கிழங்கு தேவையாகவுள்ளது. எமது நாட்டுக்கு நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு இரு மாதங்கள் வரை களஞ்சியப்படுத்தப்பட்டுச் சந்தைப்படுத்தலுக்காக விநியோகம் செய்யப்படுவது வழமையாகும். யாழ்.மாவட்டத்தில் இருந்த உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு நியாயமான சந்தை விலையைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக உருளைக்கிழங்கு மீதான இறக்குமதி வரியைப் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிவரை அதிகரிபபது எமது உருளைக்கழங்கு உற்பத்தியாளர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமையும்.

வெங்காயச் செய்கையானது பெரும் போகத்தில் 600ஹெக்ரேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. வெங்காயச் செய்கையின் சராசரி விளைச்சல் ஹெக்ரேயருக்கு 15 மெற்றிக்தொன். 9ஆயிரம் மெற்றிக்தொன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பெப்ரவரி மாதம் 2ஆம் வாரத்தில் ஆரம்பமாகி மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை வெங்காயச் செய்கையின் அறுவடை நடைபெறும். மாதமொன்றுக்கு 12,405 மெற்றிக்தொன் வெங்காயம் தேவையாகவுள்ளது. சாதாரணமாக எமது நாட்டுக்கு நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒருமாதம் வரை களஞ்சியப்படுத்தப்பட்டுச் சந்தைப்படுத்தலுக்காக விநியோகம் செய்யப்படுவது வழக்கம். யாழ்.மாவட்டத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்துக்கு நியாயமான சந்தை விலையைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக வெங்காயம் மீதான இறக்குமதி வரியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 15ஆம் திகதிவரை அதிகரிப்பது வெங்காய உற்பத்தியாளர்களுக்குப் பொருத்தமானதாக அமையும். எனவே உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் என்றுள்ளது.

bigonionseddada

Related posts:

அபாயகரமானநிலையைகருத்திற்கொண்டுவீட்டில்இருந்து கற்றலை முன்னெடுங்கள் - மாணவர்களிடம் இலங்கைதமிழ்ஆசிரியர...
கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக...
வறட்சியான வானிலை - நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் வயல் நிலங்கள் பாதிக்கப்பு - விவசாய அமைச்சு அறிவிப்பு!