வீதி மின்விளக்குகள் இன்மையால் இருளில் மூழ்கும் பச்சிலைப்பள்ளி – பிரதேச மக்கள் அதிருப்தி!

Friday, October 5th, 2018

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பல கிராமங்களுக்கு வீதி மின் விளக்குகள் இன்மையால் கிராமங்கள் இருளில் மூழ்குவதாககவும் இதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுவருகின்றனர்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

இயக்கச்சி ஏ-9 பாதைக்கு வடக்குப் பக்கமாக உள்ள கிராமங்களான கோயில் வயல், சங்கத்தார் வயல், பனிக்கையடி, காளிகோயிலடி மற்றும் வை.எம்.சி.ஏ.கிராமம் அதனை அண்டிய பகுதிகளான மாசார், சோரன்பற்று ஆகிய கிராமங்களும் அதனை அண்டிய கிராமங்களிலும் உள்ள வீதிகளில் வீதி மின் விளக்குகள் மிகக் குறைந்தளவிலேயே பொருத்தப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு காணப்படும் மின் விளக்குகளும் அனேகமானவை செயலிழந்தே காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மிகவும் பின்தங்கிய கிராமங்களில் புல், பூண்டுகள், மரஞ்செடிகொடிகள் நிறைந்த கிராமங்களாக காணப்படுவதனால் இரவு வேளைகளில் மக்கள் அவசர தேவைகளுக்கும் வீதிக்கோ அல்லது ஒழுங்கைக்கோ வருவதற்கு அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ் மாவட்டத்தின் அதிகமான பகுதிகளில் வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வரும் நிலையில் ஏன் எமது ஊர்களுக்கும் வீதி மின் விளக்குகள் பொருத்தப்படக்கூடாது? எமது கிராமங்கள் ஒளியூட்டப்படக் கூடாது? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மாரி காலம் ஆரம்பித்தள்ளமையால்; முழுமையாக மழை தொடங்குவதற்கு முன்னர் எங்கள் கிராமங்களையும் இருளிலிருந்து காப்பாற்ற பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பாகப் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தவிசாளர் தெரிவிக்கையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திணைக்களத்தால் 2 மில்லியன் ரூபா இத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்

இரண்டு மாதங்களுக்குள் குறிப்பிட்ட கிராமங்களுக்கான மின் விளக்குகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படும் என்றார்.

Related posts: