வடக்கில் போனஸ் ஆசனத்திற்காக போட்டி:  தமிழரசுக்கட்சி – ரெலோ இடையில் முறுகல் நிலை!  

Sunday, June 19th, 2016

வட மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள போனஸ் ஆசனத்தை நிரப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது பங்காளிக்கட்சியான ரெலோவிற்கு சந்தேகத்தை உருவாக்கி வருகின்றது என செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை ஒப்படைத்த ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பு உறுப்பினர் எம்.பி.நடராசாவுக்கு பின்னர் அடுத்த ஒரு வருடத்திற்கான உருப்பினர் பதவி போனஸ் ஆசனத்தின் அடிப்படையில் ரெலோவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள போதும் இரண்டு மாதங்களாகின்ற நிலையில் வெற்றிடம் இது வரை நிரப்படப்படவில்லை.

2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த வட மாகாணசபை தேர்தலில் அமோக வெற்றியீட்டியதை தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு போனஸ் ஆசனம் மன்னாரில் போட்டியிட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அயூப் அஸ்மீனுக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டது.

மற்றைய ஆசனம் சுழற்சி முறையில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் சுழச்சி முறையில் பகிர்ந்துக்கொள்வது என இணக்கம் காணப்பட்டது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மேரி கமலா குணசீலன் ஒன்றரை வருடங்கள் உறுப்பினராக இருந்துள்ளார்.

இவர் தமிழர் விடுதலைக்கூட்டனியின் பட்டியல் மூலம் வேட்பாளராக்கப்பட்டாலும், வேட்பு மனுவில் கையெழுத்திட்ட உடனேயே இலங்கை தமிழரசுக்கட்சியில் இணைந்து கொண்டார். தற்போது மத்திய குழுவிலும் அவர் அங்கம் வகிக்கின்றார். இது போலவே வவுனியாவில் ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக்கூட்டனி பட்டியலில் இடம் பெற்ற இந்திரராசா வெற்றி பெற்ற பின் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியுடன் சங்கமமாகிவிட்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் பட்டியலில் போட்டியிட்ட வைத்தியகலாநிதி சிவமோகன் பாராளுமன்ற தேர்தலோடு தமிழரசுக்கட்சிக்குள் நுழைந்து விட்டார். கூட்டமைப்பிற்குள்ளேயே கட்சித்தாவலை ஆரம்பித்து வைத்தவர்கள் மேரி கமலா மற்றும் இந்திரராசாவும் என தெரிய வருகின்றது.

போனஸ் ஆசனத்தின் இரண்டாவது தவணைக்காலம் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த எம்.பி. நடராசாவுக்கு வழங்கப்பட்டது. வவுனியாவில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவே எம்.பி.நடராசாவுக்கு வழங்கப்பட்டது. நடராசாவும் தனக்கு இன்னும் 6 மாதங்கள் மேலதிகமாக தருமாறு கட்சித்தலைமைகளிடம் வேண்டுகோள் விடுத்தும் மறுத்து விட்டார்கள்.

தற்போது மூன்றாவது தவணைக்ககாலம் தமக்கே என ரெலோ இலவு காத்த கிளி போல் காத்திருக்க மீண்டும் தமிழரசுக்கட்சி மன்னாரில் போட்டியிட்ட வி.எஸ்.சிவகரனுக்கு வழங்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அடிப்படையில் தமிழரசுக்கட்சிக்கும், ரெலோவிற்கும் இடையில் தற்போது முறுகல் நிலை தோன்றியுள்ளது.

இதற்கிடையில் ரெலோ சார்பில் வவுனியாவில் போட்டியிட்டு அடுத்த இடத்தில் இருக்கும் மயூரனும், தமிழரசுக்கட்சி சார்பாக மன்னாரில் போட்டியிட்ட சிவகரனும் தமக்கே அடுத்த போனஸ் ஆசனம் என நம்பிக்கையுடன் இருக்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை தமிழரசுக்கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக செயற்பட்ட காரணத்தினால் சிவகரனுக்கு வழங்கக்கூடாது என தமிழரசுக்கட்சியின் ஒரு சாரார் ஏற்கனவே போர்க்கொடி தூக்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவுடன் நட்புறவை பேணி வரும் தமிழரசுக்கட்சி ஒரு போனஸ் ஆசனத்திற்காக ரெலோவோடு முரண்பட்டுக்கொள்ள முனைப்புக்காட்டாது என தெரிய வருகின்ற போதும் குறித்த போனஸ் ஆசனத்தை ரெலோ மயூரனுக்கு வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுத்தடிப்பு அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது பதவிக்காலத்தை இரண்டாவது தடவையாகவும் எடுத்துக்கொண்டு மனச்சாட்சிக்கு விரோதமாக தமிழரசுக்கட்சி செயற்படுமா? என்பதனை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே அங்கத்துவக்கட்சிகளை புறந்தள்ளி பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களையும் தமிழரசுக்கட்சி சட்டம்பித்தனமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

எது எப்படி இருப்பினும் ஈ.பி.ஆர்.எல்.எப்.மற்றும் தமிழரசுக்கட்சியும் ஏற்கனவே போனஸ் ஆசனங்களை பெற்றுவிட்ட நிலையில் அடுத்ததாக வவுனியாவைச் சேர்ந்த ரெலோ கட்சி ‘செந்தில் நாதன் மயூரனுக்கே’ வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக செய்திகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: