யாழ்.மாநகரசபை பணியாளர் மீது இனம் தெரியாதோர் தாக்குதல்!

Saturday, October 28th, 2017

யாழ்.மாநகர சபையின் வேலைத்தள மேற்பார்வையாளர் மீது ஆட்டோவில் வந்த இனந் தெரியாத நபர்கள் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மேற்பார்வையாளர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

பருத்தித்துறை வீதி ஜமுனா ஏரிப் பகுதியில் உள்ள வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் யாழ்.மாநகரசபை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ் வேலைத்திட்டத்தினை மேற்பார்வை செய்வதற்கும் ஆணையாளரினால் உத்தியோகஸ்தர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். குறித்த வாய்க்கால் துப்புரவு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அங்கு 6 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திறங்கியுள்ளனர்.

அங்கு வந்த அவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த நபரை அழைத்து அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.இதன் பின்னர் அவர்கள் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மேற்பார்வையாளரை ஆட்டோவில் வந்த மேலும் சில நபர்களும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்.மாநகர ஆணையாளருக்கு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட மேற்பார்வையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இம் முறைப்பாட்டின் படி மாநகர சபையின் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை யாழ்.மாநகர ஆணையாளர் மேற்கொண்டு வருகின்றார்.

Related posts:


இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல் வாழ்த்துகள் - விஜயதசமி வாழ்த்துச் செய்தியி...
6 மாதங்களுக்கு பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பித்தது யாழ்தேவி - நீண்ட தூர புகையிரத சே...
பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் - நிதியமைச்சர் அ...