இந்தியாவில் ஏதிலிகளாகவுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்பாடு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்!

Monday, September 5th, 2022

போர் காரணமாக இந்தியாவிற்கு ஏதிலிகளாகச் சென்ற இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான செயற்பாடுகளை இலகுவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மற்றும் நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது  ஈழ ஏதிலிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பினால் (OFERR),  போர் காரணமாக ஏதிலிகளாக.இந்தியாவுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்து வருவது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சுமார் 58,000 இலங்கையர்கள் தற்போது இந்தியாவின் தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தங்கியுள்ளதாகவும் அவர்களில் 3800 பேர் மாத்திரமே தற்போது இலங்கைக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இது தொடர்பான முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது.

000

Related posts: