யாழ்ப்பாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் வருகை – திங்கள்முதல் வழங்க ஏற்பாடு!

Saturday, July 3rd, 2021

யாழ் குடாநாட்டுக்கு இரண்டாவது கட்டமாக இன்றையதினம் 50 ஆயிரம் கொவிட்19 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் இவை திங்கட்கிழமைமுதல் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கடந்த மே மாதம் இறுதிப் பகுதியில் முதற்கட்டமாக 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படிருந்ததன.

அதன் இரண்டாவது செலுத்துகைக்கான 50 ஆயிரம் தடுப்பூசிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்று தற்போது வழங்கப்பட்டள்ளது.

இந்நிலையில் இன்றையதினம் மேலும் 50 ஆயிரம் முதற் செலுத்துகை கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துள்ளன..

இதேவேளை குடாநாட்டு மக்களின் தேவை கருதி 4 இலட்சம் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், யாழ்ப்பாணம் நகரில் உள்ள இரண்டு நகைக்கடைகளும் சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  

குறித்த கடைகளில் பணியாற்றுகின்ற சிலர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் கறித்த நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா நகரில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் சதோச பணியாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார பகுதியினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 737 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 62 ஆயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 701 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 2 இரண்டு இலட்சத்து 29 ஆயிரத்து 541 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கையில் இலங்கையில் இதுவரை 3 ஆயிரத்து 157 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: