இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல் வாழ்த்துகள் – விஜயதசமி வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Sunday, October 25th, 2020

அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் என் அன்பிற்குரிய இலங்கை வாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நவராத்திரி தினம் குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்’ளார்.

குறித்த செய்திக் குறிப்பில்  மேலும் – மனித சமுதாயத்திற்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கின்ற வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற மாபெரும் சக்திகளான துர்கா, சரஸ்வதி, லஷ்மி ஆகியோருக்கு நமது நன்றியையும், வணக்கத்தையும், வேண்டுதலையும் தெரிவிக்கும் விரதமாக நவராத்திரி விரதம் அமைகின்றது.

வெற்றித் திருநாளாம் விஜயதசமித் திருநாளன்று தொடங்கப்படும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், மக்கள் இறைவனை வணங்கி, கல்வி, கலை, தொழில் போன்றவற்றை தொடங்கி விஜயதசமித் திருநாளை மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கின்றமை அதன் சிறப்பு. தீய சக்திகளைப் புறந்தள்ளி, நேர்மறைச் சிந்தனைகளோடும், உறுதி சிறிதும் குறையாத நெஞ்சோடும் உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் எனும் நன்னம்பிக்கையோடும் இத்தகைய சிறப்பு மிக்க விஜயதசமி புனித நாளில், அன்னையின் அருளால் இலங்கை மக்கள் மதநல்லிணக்கம், பன்முகத்தன்மை என்பவற்றை வளர்க்கவும், அவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: