யாழில் முதல் தடவையாக சர்வதேச நடனத் திருவிழா!

Wednesday, November 22nd, 2017

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் பிரதான நோக்குடன் நற்ரான்டா அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச நடனத் திருவிழா இவ்வருடம் மூன்றாவது தடவையாக இலங்கையில் நடாத்தப்படவுள்ளதாகவும், சர்வதேச நடனத் திருவிழாவின் இவ்வருடத்துக்கான ஆரம்ப வைபவம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ளதாகவும், இவ்வருட நடனத் திருவிழாவில் இலங்கை, இந்தியா, இலண்டன், ரஸ்யா, இந்தோனேசியா ஆகிய ஐந்து நாட்டு நடனக் கலைஞர்களின் சர்வதேசத் தரம் வாய்ந்த நடன நிகழ்வுகள் மேடையேறவுள்ளதாகவும் நற்ரான்டா அமைப்பின் இயக்குனர் கபில பாலிகவர்த்தனா தெரிவித்துள்ளார்.

மூன்றாவது சர்வதேச நடனத் திருவிழா தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை(21) முற்பகல் யாழ். டேவிற் வீதியிலுள்ள கலைத்தூதுக் கலையகத்தில் நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும்-01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச நடனத் திருவிழாவின் ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து எதிர்வரும்-07 ஆம் 08 ஆம் திகதிகளில் கொழும்பிலும் இவ்விழாவின் ஏனைய நிகழ்வுகளை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள ஆரம்ப வைபத்தில் யாழிலுள்ள திருமறைக் கலாமன்ற மாணவர்களின் நடன அரங்கேற்றம் முதலாவதாக இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்புக் கலைஞர்களின் நடன அரங்கேற்றம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து இலங்கை, இந்தியா, இலண்டன், ரஸ்யா, இந்தோனேசியா ஆகிய ஐந்து நாட்டு நடனக் கலைஞர்களின் நடன அரங்கேற்றமும் நடைபெறும். இறுதியாக நற்ரான்டா அமைப்பின் நடன ஆற்றுகை நிகழ்வுடன் ஆரம்ப வைபவம் நிறைவு பெறும்.

மொத்தமாக 20 வெளிநாட்டு நடனக் கலைஞர்களும், 65 உள்நாட்டுக் கலைஞர்களும் இந்த விழாவில் தங்கள் நடனத் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். இதன் போது தமிழர்களின் பாரம்பரிய நடன வகைகளும் மேடையேற்றப்படும்.

வடக்கு மாகாணத்தில் கடந்த-30 வருடங்களாகப் போர் இடம்பெற்றது. போருக்குப் பின்னர் இந்தப் பிரதேச மக்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை வளர்ப்பதற்கும், வடக்கு மாகாணக் கலைஞர்களின் திறமைகளைச் சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இம்முறை முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச நடனத் திருவிழாவின் ஆரம்ப வைபவத்தை நடாத்துகின்றோம் என்றார்.

Related posts: