யாழில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

யாழ். மாவட்டத்தில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவரும் தேவா மற்றும் சன்னா ஆகியோருடன் தொடர்புடைவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐவரை சுன்னாகம் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர். குறித்த ஐவரையும் உடுவில் கொட்டியாலடி பகுதியில் வைத்து சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த மற்றும் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பியஷாந்த பண்டார தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பண்டத்தரிப்பு, தெல்லிப்பழை மற்றும் ஏழாலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் யாழ்ப்பாணம், சுன்னாகம், புத்தூர் பகுதிகளில் உள்ள பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் என்பதும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன
குறித்த கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நேற்றுமுன்தினம் மாலை குறித்த ஐவரும் மது போதையில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் சுன்னாகம் பகுதியில் பயணித்துள்ளனர்
இந்நிலையில் குறித்த நபர்களை பொலிஸார் விரட்டிச் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இதன் போது குறித்த நபர்களிடமிருந்து கோடரி மற்றும் துடுப்பாட்ட மட்டைகள் என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்
மேலும் குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்களில் மூவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு சமூக விரோத செயல்களுடன் தொடர்புபட்ட தேவா மற்றும் சன்னா ஆகியோருடன் தொலைபேசி மூலமும் சமூக வலைத்தளங்களினுடாகவும் தொடர்புகளை பேணி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், இந்த மூவரும் தேடப்பட்டு வரும் தேவா மற்றும் சன்னா ஆகியோருக்குப் பணம் சேகரித்து வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வேறொரு குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|