மூன்று கொள்ளையருக்கு 3 வருட கடூழியச் சிறை!

Wednesday, November 1st, 2017

வீதியில் செல்வோரிடம் பணம், நகைகளைக் கொள்ளையடித்து வந்த 3 பேருக்கு யாழ்ப்பாண நீதிவான் மன்று 3 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது. தலா 3 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்படும் 3 சந்தேக நபர்களும் யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்திருந்தனர். யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் சென்ற பெண் ஒருவரின் கூடையிலிருந்த 28 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அன்றைய தினமே நாயன்மார்கட்டுப்பகுதியில் வேறொரு பெண்ணின் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான தாலிக்கொடியை அறுத்தனர் என்பது விசாரணைகளில் உறுதியானது.

அவர்களது விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டன. அவர்கள் பெரும்பாலும் ஓட்டோவில் சென்றே கொள்ளையடித்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்தது.

இந்தக் குற்ற செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். வழக்குத் தீர்ப்புக்காக நேற்று முன்தினம் அழைக்கப்பட்டது. அதன் போது நீதிவான் சி.சதீஸ்தரன் இவ்வாறு தண்டனைத் தீர்ப்பளித்தார்.

அவர்கள் மீதான வழக்கு யாழ்ப்பாண நீதிவான் மன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேகர் தனுசன் (வயது-20), றொபின்சன் றெக்ஸ் சஜீவன் (வயது-24), அன்ரன் ஜெயம் அனோஜன் (வயது-24) ஆகியோருக்கே கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts: