மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஆமை வேகத்தில் – சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பலரும் அதிருப்தி!

Saturday, March 24th, 2018

ஆறு மாதங்களில் நிறைவுறும் என்று தெரிவிக்கப்பட்ட சாவகச்சேரி மலக்கழிவு சுத்திகரிப்பு இயந்திரத்துடன் கூடிய கட்டடப் பணிகள் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் நிறைவு பெறவில்லை. இதனால் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட வரியிறுப்பாளர்கள், மருத்துவமனை உள்ளிட்ட அரச திணைக்கள நிறுவனங்கள் கடந்த மூன்று வருடங்களாகச் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பிரதேசங்களில் அகற்றப்படும் மலக்கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொது மக்களுக்குப் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படலாமென சுகாதாரப் பகுதியினர் எச்சரிக்கை செய்திருந்தனர்.

இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு தென்மராட்சியில் சாவகச்சேரியிலும் வடமராட்சியில் கரவெட்டியிலும் மலக்கழிவுகளைச் சுத்திகரிப்பதற்கான இயந்திரத்துடன் கூடிய பெரும் கட்டடங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

கட்டட வேலைகள் ஆறு மாத காலத்தில் முழுமையடையும் என்பதால் அதுவரையும் தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நகரசபை அறிவித்திருந்தது. கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இன்னமும் வேலைகள் முழுமை செய்யப்படவில்லை. இதனால் வரியிறுப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கட்டட வேலைகள் முழுமையடையாததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட தமது காணியில் உள்ள மலகூடத்தைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லையெனவும் நகரசபைப் பகுதியில் இயற்கைக் கடன் கழிக்கக்கூடிய இடவசதிகள் இன்மையால் தமது பெண் பிள்ளைகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சாவகச்சேரி பிரதேச சபையில் மலக்கழிவு சுத்திகரிப்புத் தாங்கி அமைக்கப்பட்டுள்ள போதிலும் அங்குள்ள இயந்திரம் பழுதடைந்தமையினாலும் குறைந்தளவு கொள்ளளவு கொண்ட தாங்கி என்பதால் பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வந்த சேவையும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் நகரசபை ஆகியவற்றில் கழிவகற்றும் பவுசர்கள் உள்ள போதிலும் சேகரிக்கும் கழிவினைக் கொட்டுவதற்கான இடவசதியின்மையால் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக மருத்துவமனைகள், படை முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றில் மாதம் ஒரு தடவை கழிவகற்றல் செய்யப்படுகின்றது. எனினும் பொதுமக்களின் மலக்கூடக் கழிவுகளை அப்புறப்படுத்த சபைகள் பின்னடித்து வருகின்றன என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

கழிவகற்றல் தொடர்பாக சபையின் வரியிறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் எமக்கு முறைப்பாடுகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். கட்டடப் பணிகள் முழுமை செய்யப்பட்டு கையளிக்கும் வரை திட்டத்தினை செயற்படுத்த முடியாமல் உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து கடந்த வாரம் பொதுக் கணக்காய்வு அலுவலர்கள் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.

அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக யாழ்;ப்பாண மாவட்டச் செயலகத்தினரே முடிவு செய்வார்கள் என்று சாவகச்சேரி நகரசபை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related posts: