மரக்கறி , மீன் வியாபாரத்தில் பெரும் வீழ்ச்சி!

Tuesday, May 7th, 2019

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களின் பின்னர் மரக்கறி மற்றும், மீன் வியாபாரங்களின் விற்பனை வீழ்ச்சிடைந்துள்ளது என்றும் அதனால் தமது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மன்னார் வியாபாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும்  சோதனைக் கெடுபிடிகளால் வியாபாரிகள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாகக் கேட்டறிந்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்கொலை குண்டுத்தாக்குதலில் இறந்த பொதுமக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு மற்றும் சோதனைக் கெடுபிடிகளால் மக்கள் மன்னார் நகருக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர்.

அவசர தேவை கருதி வந்தாலும் சற்று நேரம் கூட தாமதிக்காமல் சென்று விடுகிறார்கள். முன்னர் இந்த நேரம் (முற்பகல்) மீன் மற்றும் மரக்கறிச்சந்தைகளில் கூட்டம் அலை மோதும். மீனுக்கும் கரட்டுக்கும் விலை குறைக்குமாறு பேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

தற்போது போஞ்சியைத்தவிர அனைத்து மரக்கறி வகைகளும் உள்ளன. ஆனால் வியாபாரம் மூன்றில் ஒரு பகுதியேனும் இல்லை. வீணாக பழுதடைந்து குப்பையில் போடவேண்டிய நிலை ஏற்படுகிறது எனறு மரக்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

மீன் வியாபாரிகள் கருத்து தெரிவிக்கும் போது, விலையில் எது வித மாற்றமும் செய்யவில்லை  குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின் மக்கள் மன்னார் நகரத்துக்கு வருவதற்கு அஞ்சுகிறார்கள். படையினரின் பாதுகாப்புக் கெடுபிடி மிக அதிகமாகவுள்ளது. தற்போதைய அவசரமான சூழலில் மக்களின் நன்மை கருதி பாதுகாப்பை புறந்தள்ளவும் முடியாது என்று தெரிவித்தனர்.

Related posts: