யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் – நான் மீண்டும் வருவேன் – முன்னாள் பிரதமர் மகிந்த அதிரடி அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022

எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் நேற்று முதல் தடவையாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச தனது மீள் அரசியல் பிரவேசம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் நடைபெற்றது.

மே மாதம் 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அரசியல் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியிருந்தார். எனினும் மீண்டும் அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் நேற்று தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்திற்கு வந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்சவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.  மகிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திகள் குறித்தும் வினவியுள்ளனர்.

“நானும் வீட்டிலிருந்து அந்த செய்திகளைப் பார்த்தேன். அவை அப்பட்டமான பொய்கள். நான் நலமாக உள்ளேன். அரசியல் பணிகள் வழக்கம் போல் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்” என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர், ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

அவர் ஆபத்தான நிலையில் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பின்னர் அந்த செய்திகள் பொய்யானது எனவும் சமூக ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனிடையே முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை துளியளவும் குறைவடையவில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் பொதுஜன பெரமுனவே இன்றும் செல்வாக்குள்ள கட்சியாக காணப்படுகிறது என்று நாம் நம்புகின்றோம். பொதுஜன பெரமுனவின் மீதும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை துளியளவும் குறைவடையவில்லை. எனவே நாம் தேர்தலைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. பொதுஜன பெரமுன அவ்வாறான கட்சி அல்ல.

எமது கட்சிக்கெதிராக நாடாளுமன்றத்திற்குள் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே ஒரு தொகுதியினர் எதிர்க்கட்சியிலும், பிரிதொரு தரப்பினர் சுயாதீனமாகவும் செயற்படத் தொடங்கினர்.

இவர்களே மகிந்த ராஜபக்ஷவை பதவி நீக்குமாறு கோரினர். மொட்டுசின்னத்தில் பொதுஜன அபரமுன சார்பில் போட்டியிட்ட எவருக்கும் அவ்வாறு கோரும் உரிமை கிடையாது. எவ்வாறிருப்பினும் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை இன்னும் குறைவடையவில்லை.

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு மக்கள் பதிலளிப்பர். எந்த தேர்தலானாலும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் பலம் எமக்கிருக்கிறது.

மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் அவரின் வழிகாட்டலின் கீழ் நாம் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெருவோம். அவரையே மக்கள் முழுமையாக நம்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: