போலி பதிவுத் திருமணம் ஆசாமிக்கு விளக்கமறியல் நீடிப்பு – பதிவாளருக்குக் கிடைத்தது பிணை!

Thursday, December 15th, 2016

திருமணம் புரிவதாகக் கூறி 45 இலட்சம் ரூபாவை சீதனமாகப் பெற்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியல் நீடிக்குமாறும் அவருக்கு உடந்தையாக இருந்த திருமணப் பதிவாளரை பிணையில் விடுவிக்குமாறும் யாழ்.நீதிவான் மன்றம் உத்தரவிட்டது.

பிரான்ஸை வசிப்பிடமாகக் கொண்ட இலங்கையில் கேகாலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை பதுளையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் தொலைபேசி மூலமாக காதலித்து பின்னர் குறித்த பெண் 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தபோது யாழ்ப்பாண கொழும்புத்துறைப் பகுதியில் மணமகனது நண்பர் ஒருவரது வீட்டில் வைத்து அந்த இளைஞரை திருமணம் முடித்துள்ளார்.

அவர்களுடைய திருமணத்தை வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த திருமணப் பதிவாளர் நிறைவேற்றியதாகக் கூறப்படுகின்றது. திருமணத்தின் பயனாக மணமகளால் 45லட்சம் ரூபா மணமகளுக்கு வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குறித்த பெண் பிரான்சிற்கு சென்று திருமணம் முடித்த இளைஞரை அந்நாட்டுக்கு அழைப்பதற்காக திருமண பதிவுச் சான்றிதழை அனுப்பி வைக்குமாறு பல முறை கோரியுள்ளார்.

எனினும் அவர் திருமணச் சான்றிதழை அனுப்பி வைக்கவில்லை. இதனையடுத்து அந்தப் பெண் யாழ்ப்பாணத்திற்கு வந்து விசாரித்த போதே அவ்வாறான திருமணப் பதிவொன்று இடம்பெறவில்லை எனவும் குறித்த இளைஞர் ஏற்கனவே திருமணம் ஆனாவர் என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து யாழ்ப்பாண சிறப்புக் குற்ற விசாரணைப் பிரிவில் நம்பிக்கை மோசடி தொடர்பாக பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனையடுத்து பொலிஸாரால் பதுளையைச் சேர்ந்த மாப்பிள்ளையும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திருமணப் பதிவாளரும் கைது செய்யப்பட்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். தொடர்ந்து இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிப்பட்டிருந்தது.

வழக்குத் தவணைகளின் போது சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது திருமணப் பதிவாளரை 2லட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறும்  போலி மணமகளை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

law-720x400

Related posts: