போலி நாணயத்தாள் மோசடி-பின்னணியில் இருந்ததாக பெண் உட்பட மூவர் கைது!

Saturday, June 25th, 2016

நகையை அடகுவைத்து வங்கியில் பெற்றுக்கொள்ளப்பட்ட நான்கு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தில் 2 இலட்சம் ரூபாய், போலி நாணயத்தாளாக வழங்கப்பட்டது என பெண் ஒருவர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பொலிஸார், மூவரை வியாழக்கிழமை (24) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார், சனிக்கிழமை தெரிவித்தனர்.

ஆனைக்கோட்டை பகுதியினை சேர்ந்த மேற்படி பெண், திட்டமிட்டு தனக்கு வழங்கப்பட்ட பணம் போலியானது என பொய் முறைப்பாடு செய்துள்ளமை விசாரணைகளின்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குறித்த பெண், புகைப்பட ஸ்டுடியோவின் ஊழியர், மற்றுமொரு புகைப்பட ஸ்டுடியோவின் உரிமையாளரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், போலி நாணயத்தாளை பிரதி செய்து பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்ட இயந்திரம், இரண்டு கணனிகள் என்பவற்றையும் குற்றப்புலனாய்வு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதுபற்றி தெரியவருவதாவதுஅரச வங்கி ஒன்றில் கடமையாற்றும் மேற்படி பெண்ணின் உறவினர்கள் வேறு ஒரு உறவினருக்கு கொடுக்குமாறு கூறி, இவரின் வங்கி கணக்கு இலக்கத்துக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளனர்.

அனுப்பிய பணத்தினை கொடுக்காத பெண், அனுப்பியவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தினை கொடுப்பதற்காக அப்பகுதியிலுள்ள புகைப்பட ஸ்டுடியோவில்  டிசைனராக கடமையாற்றும் இளைஞன் மூலம் போலியாக நாணயத்தாளினை உருவாக்கியுள்ளார்.

பின்னர், யாழ். நகரப்பகுதியில் உள்ள மற்றுமொரு ஸ்டுடியோவில் போலிநாணயத்தாள்களை பிரதி செய்து பெற்றுக்கொண்டுள்ளார்.

அதனையடுத்து, மானிப்பாய் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வைக்கப்பட்ட அடகு மூலம் புதன்கிழமை தனக்கு வழக்கப்பட்ட பணத்தில் 2 இலட்சம் ரூபாய் போலியானது என கூறி இளவாலை பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (23) முறைப்பாடு செய்திருந்தார்.

தனக்கு வழங்கப்பட்ட 5ஆயிரம் ரூபாய் பெறுமதியான 40 நாணயத்தாள்கள் போலியானவை என முறைப்பாட்டில் கூறப்பட்டிருந்தது.குறித்த வங்கிக்கு சென்று புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, அங்கு காணப்பட்ட சி.சி.டிவி. கமெராக்களில் பதிவான காட்சிகளில் இந்த பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய், அதற்கு குறைவான பெறுமதியை கொண்ட நாணயத்தாள்களே வழங்கப்பட்டமை தெரியவந்தது.

அதனையடுத்து, பெண் கொடுத்த முறைப்பாடு பொய்யானது என தெரியவந்துள்ளனது. அதனையடுத்து சந்தேகநபர்களை கைதுசெய்த குற்றப்புலனாய்வு பொலிஸார், மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

Related posts: