போதையில் திரிந்தால் இரவு முழுவதும் சிறைக்குள் ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி எச்சரிக்கை!

Wednesday, October 12th, 2016

ஓமந்தைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு வேளைகளில் வீதிகளில் மது போதையில் காணப்படும் அனைவரும் கைது செய்யப்படுவர். இரவு முழுவதும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு மறுநாளே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இவ்வாறு ஓமந்தைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா தெரிவித்தார். ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புக் குழுக்களும், பொலிஸாருக்கும் இடையில் நேற்று முன்தினம் சந்திப்பு நடைபெற்றது. அதிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்ததாவது:

மது பயன்பாடு கூடிய மாவட்டங்களில் வவுனியாவும் உள்ளடங்குகின்றது. கசிப்பு காய்ச்சுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பின்னர் விடுவிக்கப்படுகின்றனர். மீண்டும் அவர்கள் இரகசியமாக காட்டுப் பகுதியில் அதே தொழிலில் ஈடுபடுகின்றனர் என்று சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர்களை கைதுசெய்யுமாறு நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன். இவ்வாறான தொழிலில் எவரும் ஈடுபட வேண்டாம். மதுப் பாவனையில், போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் குடும்பத் தலைவர்களால் அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். இரவு வேளையில் மதுபோதையில் வரும் இளைஞர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளேன். எமது பிரதேசத்தில் எந்த வகையான கலாச்சார பிறழ்வுகள் இடம்பெற்றாலும் நாம் அதனைத் தடுக்க உதவுவோம். எமது தொலைபேசி இலக்கங்களுக்கு அழையுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களைப் போதிப்போம். இணையதள உலகில் நல்ல விடயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுப்போம். நல்ல எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம். – என்றார்.

sri-lanka-police

Related posts: