முப்பது வருட யுத்ததை வெற்றிகொண்டதில் எமக்கும் பங்குண்டு – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

Wednesday, February 24th, 2021

இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெளத்தர்களின் புனித தலங்களை இணைக்கும் ‘பெளத்த பாதை‘ ஒன்றை வடிவமைத்து வருவதாகவும் இதன் மூலம் பெளத்த மதத்தை பின்பற்றுகின்ற மக்கள் தமது நாட்டுக்கு வருகை தர முடியும் என்றும் இதற்கான முதலாவது அழைப்பை இலங்கையின் பிரதமருக்கு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அதன் பின்னர் இணை ஊடக சந்திப்பொன்றை நடத்திய நிலையில் அதில் உரையாற்றும் போதே பிரதமர் இம்ரான் கான் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அரவ் மேலும் கூறுகையில் –

பாகிஸ்தான் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளது. சீன – பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை வேலைத்திட்டமும் முதன்மையானதாகும்.

நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் மிக முக்கியமானதாகும். எனவேதான் நான் எனது தூதுக்குழுவிடம் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் முன்னேற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறியுமாறு கேட்டிருக்கிறேன்.

அத்துடன் சீன – பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை வேலைத்திட்டமானது மத்திய ஆசியாவுக்கும் இலங்கைக்கம் முக்கியமானதாகும்.

அதேபோன்று எமது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைக் குறித்தும் நாம் பேசியிருக்கிறோம் எமது வர்த்தக உறவுகள் மூலம் இரு நாடுகளும் மேலும் ஒன்றுபட முடியும். மேலும் நெருக்கமடைய முடியும்.

எமது இரு நாடுகளும் பங்கரவாதம் எனும் பொதுவான பிரச்சினைக்கு முகங்கொடுத்த நாடுகள். மிக மோசமான பயங்கரவாதத்திற்கு 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் முகங்கொடுத்தது. இதனால் 70 ஆயிரம் உயிர்களை நாம் இழந்தோம்.

அதேபோன்று இலங்கையும் 30 வருட காலம் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடியது. இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதை இந்த இடத்தில் நினைவுபடுத்துகிறேன்.

சுற்றுலாத்துறையின் மீது தங்கியுள்ள இலங்கையின் அபிவிருத்தி இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பயங்கரவாதம் உள்ள ஒரு நாட்டினால் முன்னேற்றமடைய முடியாது. பயங்கரவாதம் உள்ள ஒரு நாட்டில் முதலீடுகளையும் செய்ய முடியாது

தற்போது நாம் கொரோனா வைரஸ் என்னுமொரு பொதுவான பிரச்சினைக்கு முகங்கொடுக்கிறோம். சுற்றுலாத்துறையில் தங்கியுள்ள இலங்கை போன்ற சகல நாடுகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

கொரோனா வைரஸ் நெருக்கடி வறிய நாடுகளையும் அவற்றில் வாழுகின்ற வறிய மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதை அபிவிருத்தியடைந்த நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். வறுமையான நாடுகள் எவ்வாறு கடன் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றியும் நாம் கலந்துரையாடினோம்.

கொரோனா வைரஸ் உலகில் நிலவும் சமத்துவமின்மையை நன்கு வெளிக்காட்டியுள்ளது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக நிறுவனங்கள் கொரோனா வைரஸினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவ்வாறான நாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: