போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் உள்ள கைதிகளை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப திட்டம் – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, August 29th, 2020

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை, வேறு புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்புவது குறித்து அவதானம் செலுத்துவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலங்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்புடையவர்களை விளக்கமறியலில் வைத்தல் மற்றும் சிறைவைத்தல் என்பன குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர், போதைப்பொருள் குற்றம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுவரையில் விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை விடவும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், அவர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், விளக்கமறியல் சிறைச்சாலையில், சுமார் 11 ஆயிரம் பேருக்கே வசதிகள் உள்ளமையினால், தற்போது அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: