பொறுப்பானவர்கள்தான் பொலிஸ் பதவிக்குத் தேவை – யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வலியுறுத்தல்!

சட்டத்தையும் ஒழுங்கையும் பொறுப்புடன் நிலைநாட்டக்கூடியவர்களை பணியில் அமர்த்துவதற்கு பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ்.கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது:
பொலிஸாரின் பொறுப்பற்ற துப்பாக்கிச்சூட்டினால் இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டமையும் கொலையை மறைத்து விபத்து என சித்தரிக்க முயன்றமையையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் தமது கையிலெடுத்துக்கட்டுப்பாட்டில்லாமல் செயற்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே தடுப்பில் உள்ள கைதியொருவர் கொல்லப்பட்டு அவரது சடலம் கிளிநொச்சியில் போடப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. பொலிஸ் கட்மைப்பபைச் சீரமைத்து முறையாகப் பயிற்சி பெற்ற கட்டுப்பாட்டுடன் செயற்படக்கூடிய மக்களுடன் நல்லுறவைப் பேணக்கூடிய பொலிஸாரைப் பணியில் அமர்த்தியிருந்தால் இந்த இரு மாணவர்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள் காலம் தாழ்த்தாது சட்டத்தையும் ஒழுங்கையும் பொறுப்புடன் நிலைநாட்டக்கூடியவர்களை பணியில் அமர்த்த வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|