சட்டக் கல்லூரி கற்கை கட்டண அதிகரிப்பு – இரு வாரங்களுக்குள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன் என நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 25th, 2023

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு சட்டக் கல்லூரியின் கற்கை  கட்டணம் எதனடிப்படையில் அதிகரிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்படும் வருமானம்  ஆகியன தொடர்பான தகவல்களை இன்னும் இரு வாரங்களுக்குள் சபைக்கு சமர்ப்பிப்பதாகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இலங்கை சட்டக்கல்லூரி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை சட்டக் கல்லூரி,  சட்ட ஆய்வு கவுன்சிலின் அனுமதியுடன் 2023 ஆம் ஆண்டுமுதல் அமுலுக்கும் வகையில் கல்லூரியின் கற்கை மற்றும் ஏனைய கட்டணங்களை அதிகரித்துள்ளது. பிரதம நீதியரசர் தலைமையிலான சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்த தீர்மானத்துக்கு அமைச்சர் என்ற ரீதியில் நான் அனுமதி வழங்கியுள்ளேன்.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கட்டணம் எதனடிப்படையில் அதிகரிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்படும்  வருமானம் தொடர்பான தகவல்களை இன்னும் இரு வாரங்களுக்குள் சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நாட்டில் உள்ள அரச கல்வி நிறுவனங்களின் செலவுகளுக்கான நிதியை அரசாங்கம் வழங்குகிறது.

இலங்கை சட்டக் கல்லூரியின் செலவுகளுக்கு அரசாங்கம் நிதி வழங்குவதில்லை. மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணங்களை கொண்டே கல்லூரியின் நிர்வாக பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. சட்டக்கல்லூரியின் சுமார் 5000 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.

சட்டக் கல்லூரியில் பாரிய வளப்பற்றாக்குறை காணப்படுகிறது. பரீட்சை இடம்பெறும் காலங்களில் பிற தரப்பினரின் கட்டிடங்கள் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆகவே, கடந்த காலங்களை காட்டிலும் தற்போது செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்வாறான பின்னணியில் தான் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: