உலக வங்கி ஆதரவில் முன்பள்ளி சிறார்களுக்கு பகலுணவு – இந்த மாதம்முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் அறிவிப்பு!

Monday, September 12th, 2022

உலக வங்கியின் ஆதரவின் கீழ் முன்பள்ளி பிள்ளைகளுக்கான பகல் உணவு வழங்கும் நடவடிக்கையை இந்த மாதம்முதல் ஆரம்பிக்கப்படும் என ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

35 ஆயிரம் மலையக பிள்ளைகள் மற்றும் போசாக்கு குறைப்பாடுள்ள பகுதிகளில் வாழும் 1 இலட்சத்து 55 ஆயிரம் சிறார்களுக்கு இந்த மதிய உணவு வழங்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நயன எஸ்.பி.கே.டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது, 90 ஆயிரம் போசாக்கு குறைபாடுள்ள முன்பள்ளி சிறார்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதுடன், அதற்காக விநியோகத்தர்களுக்கு தலா உணவு ஒன்றுக்கு 30 ரூபா வழங்கப்படுகின்றது.

எனினும், அந்தத் தொகை போதாது என்பதால் அதனை 60 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான பணம் உலக வங்கியின் உதவியின் கீழ் வழங்கப்படவுள்ளது.

மேலும் இந்த மாதம்முதல் காலை உணவுக்கு பதிலாக தற்போதைய செய்முறையை திருத்தி மதிய உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

12 வாரங்கள் நிறைவடைந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 10 மாத காலத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபா மதிப்பிலான சத்துணவுப் பொதி வழங்கப்பட்டு வந்த நிலையில், உணவுப் பொருட்கள் சீராக கிடைக்காததால் கடந்த ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், பல மாவட்டங்களில் மீண்டும் போஷாக்கு பொதிகள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில வாரங்களில் நாடளாவிய ரீதியில் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: