பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய இரு இளைஞர்கள்!

Saturday, December 8th, 2018

வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக வியாழன் மாலை 4.30 மணியளவில் இ.போ.ச. பஸ் சாரதியின் அசமந்தமான செயற்பாட்டால் விபத்தொன்று ஏற்பட்டது. எனினும் இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

வவுனியா ஏ – 9 வீதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர். இதன்போது வேகமாக  வந்த இ.போ.ச. பஸ் வீதியால் வந்த இளைஞர்களை கவனத்தில் கொள்ளாது பஸ் நிலையத்திற்குள் நுழைவதற்காக திரும்பியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் பஸ்ஸின் பின் பகுதியுடன் மோதுண்டு கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் மோட்டார் சைக்கிளும் பெரும் சேதத்திற்குள்ளானது.

இந்நிலையில் கீழே விழுந்த இரு இளைஞர்களும் தாம் உயிர் தப்பிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இ.போ.ச. சாரதியும் நடத்துநரும் இளைஞர்கள் மீது குற்றம் சாட்டியவாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

எனினும் அந்தப் பகுதியில் நடந்து சென்ற வயோதிபர் குறித்த சம்பவத்தை நேரடியாகத் தான் கண்டதாகவும் பஸ் செலுத்தப்பட்ட விதமே பிழையானது என பொலிஸாருக்குத் தெரிவித்தார்.

எனினும் இ.போ.ச. சாரதியும் நடத்துநரும் அந்த வயோதிபரை அப்பகுதியில் இருந்து அகன்று செல்லுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதுடன் பொலிஸார் மூலமாக கண்கண்ட சாட்சியை விரட்டிக் கலைக்க முயன்றனர்.

எனினும் பொலிஸார் அந்தப் பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பஸ்ஸையும் சேதத்திற்குள்ளான மோட்டார் சைக்கிளையும் பொலிஸ்; நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

Related posts: