பிள்ளை விளையாட ஆமை பிடித்துக்கொடுத்தவருக்கு 100 மணிநேர சீர்திருத்த பணியிலீடுபடுமாறு நீதவான் உத்தரவு!

Tuesday, March 29th, 2016

தனது பிள்ளை விளையாடுவதற்காக கடற்கரையில் ஊர்ந்து சென்ற சிறிய ஆமையைப் பிடித்துக் கொடுத்த குடும்பஸ்தரை 100 மணித்தியாலங்கள் சமுதாயம்சார் சீர்திருத்த பணியில் ஈடுபடுமாறு பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் நேற்று (28) தீர்ப்பளித்தார்.

அத்துடன், ஆமையைக் கடலில் விடுமாறும் பருத்தித்துறை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். கற்கோவளம் புனித நகரைச் சேர்ந்த மேற்படி குடும்பஸ்தர், கடற்கரையில் சென்ற ஆமையைப் பிடித்து தனது பிள்ளைக்கு விளையாடக் கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் அறிந்த பருத்தித்துறை பொலிஸார், குறித்த குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, குறித்த குடும்பஸ்தருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் தீர்ப்பளித்தார்.

மேற்படி குடும்பஸ்தர் அபராதப் பணத்தைச் செலுத்த இயலாத பொருளாதார நிலையைக் கொண்டிருப்பதை அறிந்த சமுதாய சீர்திருத்த அதிகாரி, இது தொடர்பில் நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து, வழக்கை மீள் விசாரணை செய்த நீதவான், குடும்பஸ்தரை 100 மணித்தியாலங்கள் சமுதாயம்சார் சீர்திருத்த பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டார்.

Related posts: